தமிழகம்

பி.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது: புதுவை எதிர்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்

அ.முன்னடியான்

பி.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது எனப் புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

‘‘புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பழங்குடியின மக்களுக்கும் எந்தவித இட ஒதுக்கீடும் இல்லை என்றும், பழங்குடியின மக்களைப் பட்டியல் இனத்தவர் பட்டியலில் சேர்த்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது எனப் புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் புதுச்சேரி அரசு உள்ளாட்சி வார்டு அமைப்புகளை மாற்றம் செய்து மீண்டும் தேர்தலைச் சந்திப்பது என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

ஆனால், புதுச்சேரி முன்னாள் கவுன்சிலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றார். அதேபோல், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கான ஆணை 2017–ம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்டது.

தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாவிட்டால் அரசியல் சட்ட உரிமைகளை மீறும் செயலாக இருக்கும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அளித்து, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டும். மேலும், இதனை நடைமுறைப்படுத்தாமல் அரசு தேர்தலை நடத்தினால் அது ஜனநாயகப் படுகொலைக்குச் சமமாகும். எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.’’

இவ்வாறு சிவா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT