தமிழகம்

அரபு நாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்குமாறு வாட்ஸ் அப்பில் கண்ணீர்மல்க கோரிக்கை

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கள் ஏராளமானோர் வெளிநாடு களில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மான் என்னும் இடத்தில் 2 விசைப்படகுகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங் களைச் சேர்ந்த 23 மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வந்தனர். இவர்களுடன் அரபு நாட்டைச் சேர்ந்த 2 மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்தனர்.

இந்த 25 மீனவர்களும் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கமீஸ் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்தார். அவரது உடலை மீட்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் நீதிமன்ற விசாரணைக் காக இந்த மீனவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்பு இந்த மீனவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக அரேபிய முதலாளி கூறியிருந்தார். ஆனால், வழக்கை காரணம் காட்டி மீனவர்களை திருப்பி அனுப்பாமலும், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி வைத்துக்கொண்டதுடன், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக்கூட செய்து தராமல் வீட்டுக் காவலில் வைத்துள்ளார்.

இந்த மீனவர்கள் தங்களின் பரிதாப நிலை குறித்து வாட்ஸ் அப்பில் பேசும் வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது. அதில், “போதிய உணவு கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எங்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கண்ணீர்மல்க உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT