உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை திரும்பப்பெற புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுமதியளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, முத்தியால்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ்குமார் உள்ளிட்ட இருவர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை நேற்று (அக். 04) விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வார்டுகள் ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும், அதுவரை வேட்புமனுக்கள் பெறுவதைத் தள்ளிவைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று (அக். 05) விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசுத் தரப்பில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற இருப்பதாக தெரிவித்து, அதற்கு அனுமதிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அறிவிப்பாணையை வாபஸ் பெற அனுமதித்ததுடன், புதிய அரசாணையை 5 நாட்களில் புதுச்சேரி நகராட்சி சட்டப்படி புதிய அறிவிப்பை வெளியிடும்படி அறிவுறுத்தினர்.
மேலும், குளறுபடிகள் நீக்கப்பட்டு, வேட்பமனுத் தாக்கலுக்கும் வாக்குப்பதிவுக்கும் இடையே போதிய இடைவெளி வழங்கப்பட்டு, அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்து, சுயேட்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.