ஒப்பந்த செவிலியர்கள் விவகாரத்தில், மிக விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று (அக். 05) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ஐந்தாவது மாபெரும் தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை அக்.10 அன்று இதுவரை இல்லாத அளவுக்கு 30 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தற்போது கையிருப்பில் 24 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. இன்று மாலை 9 லட்சம் அளவுக்கு வர உள்ளது. ஆக 33 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
சனிக்கிழமை மாலைக்குள் 25 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசியை 64 சதவிகிதம் பேர் செலுத்தியிருக்கின்றனர். இரண்டாவது தவணை தடுப்பூசியை 22 சதவிகிதம் பேர் செலுத்தியுள்ளனர். உலக சுகாதார நிறுவனக் கூற்றுப்படி 70 முதல் 75 சதவிகிதம் வரை தடுப்பூசி செலுத்திவிட்டால் இறப்பிலிருந்து தப்பிக்கலாம் என்கிற நிலையில் அக்டோபர் இறுதிக்குள் 70 சதவிகிதத்தை அடைந்துவிடுவோம்.
போராட்டம் நடத்திய செவிலியர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்கள். அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் இதுபோன்ற பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை.
நேற்று அவர்களிடம் பேசியிருக்கிறோம். அவர்களே எங்களைத் தவறாக வழிநடத்திப் போராடச் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். நாங்கள் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 4,800 செவிலியர்களைச் சேர்ப்பதற்குப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியாளர்களை அதில் சேர்ப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறோம். மிக விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும். முதல்வர் இந்தப் பேரிடர் காலத்தில் பணியாற்றிய ஒருவர் கூட பாதிக்காத வகையில் செயல்பட அறிவுறுத்தியுள்ளார்.
காசநோய் குறித்து தாம்பரம் சானடோரியம் மருத்துவமனையில், கிராமங்கள்தோறும் சென்று பரிசோதனை செய்வதற்காக வாகனங்களை அமைத்து அதைத் தொடங்கி வைத்து இருக்கிறோம். கரோனாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்துவகையான மருத்துவத்திலும் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.