முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

முதலமைச்சரின் தனிப் பிரிவில் ஸ்டாலின் திடீர் ஆய்வு

செய்திப்பிரிவு

முதலமைச்சரின் தனிப் பிரிவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 05) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு மனு அளிக்க வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகளை முதல்வர் கேட்டறிந்தார். மனுதாரர்களில் ஒருவர் காணாமல்போன தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை வைத்தார். இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, காணாமல் போன அப்பெற்றோரின் மகனைக் கண்டுபிடித்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்த முதல்வர், அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படுவதைக் கண்காணித்து உறுதி செய்திட வேண்டும் என்றும், மனுதாரர்களுக்கு மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய பதில்களை உடனுக்குடன் அளித்திட வேண்டும் என்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT