தமிழகம்

அப்துல்கலாம் மணிமண்டபம் கட்ட ரூ.30 கோடி

செய்திப்பிரிவு

ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்தபோது மரணமடைந்தார். அவரது உடல் கலாம் பிறந்த ஊரான ராமேசுவரத்துக்கு அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு மணிமண்டபம் கட்டப்படும் என கலாம் பிறந்த நாளான கடந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

தொடக்கத்தில் பாதுகாக்கப் பட்ட பகுதியாக இருந்த கலாம் நினைவிடம் புறக்கணிப்புக் குள்ளாகி கால்நடைகள், நாய்கள் அங்கு வந்தன. இதைத் தொடர்ந்து அப்துல் கலாமுக்கு மத்திய அரசு அறிவித்தவாறு விரைவில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என அவரது சகோதரர் முத்துமீரா மரைக்காயர் இணையதளம் கையெழுத்து இயக்கத்தை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக கலாமின் நினைவிடத்தைச் சுற்றி சுவர் அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.

இந்நிலையில், மத்திய பொதுப்பணித் துறை சார்பில் நில அளவீட்டுத் துறை அதிகாரிகள் பேக்கரும்பு நினைவிடத்தை நேற்று அளவிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கலாம் மணிமண்டப் பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.30 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கலாம் நினைவிடத்தில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடைந்துவிடும்.

தற்போது மத்திய பொதுப்பணித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வே அறிக்கையை இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் (டி.ஆர்.டி.ஓ) ஒப்படைக்கப்படும்.

கலாம் நினைவிடத்தை பொதுமக்கள் வடிவமைக்க வேண்டும் என ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் விரும்புகிறது. இதற்காக கலாம் நினைவிடத்தை வடிவமைப்பதற்கான போட்டியை விரைவில் டிஆர்டிஓ அறிவிக்கும் என்றனர்.

பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில் சர்வே பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித் துறை அதிகாரி.

SCROLL FOR NEXT