கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நவீன்ராஜை ஆதரித்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பிரச்சாரம் செய்கிறார். அருகில் அரவக்குறிச்சி எம்எல்ஏ ஆர்.இளங்கோ, வேட்பாளர் நவீன்ராஜ் உள்ளிட்டோர். 
தமிழகம்

விரைவில் க.பரமத்தி தனி வட்டமாக்கப்படும்: மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

ஜி.ராதாகிருஷ்ணன்

விரைவில் க.பரமத்தி தனி தாலுகா ஆக்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய 8-வது வார்டு உறுப்பினர் தேர்தல் அக்.9-ம் தேதி நடைபெறுகிறது. திமுக சார்பில் நவீன்ராஜ் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று (அக். 5ம் தேதி) க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டுக்குட்பட்ட வெட்டுகட்டுவலசு, அகிலாண்டபுரம் கந்தசாமி வலசு, ரெட்டிவலசு, தொட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், "தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கான அரசு. ஏழைகளுக்கான அரசு.

அரவக்குறிச்சி பகுதியில் 9 அணைகள் கட்டுவதற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் க.பரமத்தி தனி வட்டமாக (தாலுகா) அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவகிறது" எனத் தெரிவித்தார்.

அரவக்குறிச்சி எம்எல்ஏ ஆர்.இளங்கோ, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT