தமிழ் இசையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த2018-ம் ஆண்டு சௌந்தரநாயகி வயிரவனால் சிங்கப்பூரில் ‘கலா மஞ்சரி’ அமைப்பு தொடங்கப்பட்டது.
காரைக்கால் அம்மையாரின் திருவிரட்டை மணிமாலை, நன்னெறி தங்கம், கிராமிய இசை,முழுக்க முழுக்க கிராமிய வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்து நாட்டுப்புறப்பாட்டுகளை பாடி வெளியிட்டிருப்பது, திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் இருக்கும் 10 குறள்களுக்கு கர்னாடக இசையில் மெட்டமைத்து, சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழியிலும் குறளுக்கான விளக்கத்தை வெளியிட்டிருப்பது என பலபணிகளை `கலாமஞ்சரி’ செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தமிழரின்நாட்டுப்புற இசை பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நேற்று மெய்நிகர் வழியில் தொடங்கியது.
கருத்தரங்கின் இதர அமர்வுகள் குறித்து ‘கலாமஞ்சரி’ அமைப்பின் நிறுவனர் சௌந்தரநாயகி வயிரவன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
பன்னாட்டு அளவில் நாட்டுப்புற இசை
“சிங்கப்பூரின் வரலாறு இருநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டது. ஆகவே சிங்கப்பூருக்கான வரலாற்றோடு தொடர்புபடுத்தும் நாட்டுப்புறப்பாடல்கள் குறித்த முக்கிய நகர்வுகளையும் பன்னாட்டு அளவில் நாட்டுப்புற இசை குறித்த முக்கியமான நகர்வுகளையும் இந்த கருத்தரங்கத்தில் மக்கள் அரங்கத்தில் பேசவிருக்கிறோம்.
கருத்தரங்கம் முனைவர் சுப. திண்ணப்பனின் தலைமைஉரையுடன் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து அக்.5-ல் தமிழக நாட்டுப்புற இசை - மூலக் கூறுகளும் பரிமாணங்களும் என்னும் தலைப்பில் முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், 6-ம் தேதி இலங்கைத் தமிழர் நாட்டுப்புற இசை - ஊற்றுகளும் ஓட்டங்களும் என்னும் தலைப்பில் முனைவர் மௌனகுரு, 7-ம் தேதி மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் சமுதாயச் சிக்கல்கள் என்னும் தலைப்பில் முனைவர் முரசு நெடுமாறன், 8-ம் தேதி சிங்கப்பூரில் நாட்டுப்புற இசைக்கான இன்றைய நாட்டம் என்னும் தலைப்பில் நான் பேசவிருக்கிறேன்” என்றார்.
முதல் நாள் நடந்த நிகழ்வில் ‘கலாமஞ்சரி’ குறித்த காணொலி, சென்னையைச் சேர்ந்த பார்வதி பாலசுப்பிரமணியன் குழுவினரின் நாட்டுப்புற நாட்டியம் ஆகியவை நடந்தன. அதைத் தொடர்ந்து பன்னாட்டு கருத்தரங்கத்தை சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்புநிலைப் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன்தொடங்கி வைத்து உரையாற்றி யதாவது:
ஏற்றம் பெற்ற தமிழிசை எங்கும் பரவியிருக்கிறது. பொதுவாக இலக்கியத்தை 3 வகையாகப் பிரிப்பார்கள். அவை புலவர் இலக்கியம், சித்தர் இலக்கியம், பொதுமக்கள் இலக்கியம். பொதுமக்கள் இலக்கியத்தைச் சேர்ந்ததுதான் நாட்டுப்புற இலக்கியம். பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வின் எல்லாதருணங்களுக்கும் பாட்டுகள் இருக்கும். இசைமை, எள்ளல் எனபல பண்புகள் நாட்டுப்புறப் பாடல்களில் வெளிப்படும்.
வாய்மொழிச் செல்வங்களாக உள்ள நாட்டுப்புறப் பாடல்களை தொகுத்து ஆராயப்பட வேண்டும். சிங்கப்பூர் நாட்டுப்புறப்பாடல்கள் குறித்த வரலாற்றில் 1868-ல் நாராயணசாமி நாயுடு என்பவரால், `தங்கமே தங்கம்’ என்னும் நாட்டுப்புறப்பாட்டு மெட்டில் எழுதப்பட்டிருக்கும் `நன்னெறி தங்கம்’ பாடல்தான் முதலாவதாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் இந்தப் பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
சிங்கப்பூர், மலேசியா நேரப்படி மாலை 6-30 மணி முதல் 8-30 மணி வரை. இந்தியா, இலங்கை நேரப்படி மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஜூம் செயலியில் நடைபெறும் இந்த மெய்நிகர் நிகழ்வில் பங்கெடுப்பதற்கான இணைப்பு எண்: 81086326575 கடவு எண்: 5820.