காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் 6 பேருக்கு 4 தேசிய விருது கிடைத்துள்ளது. நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சந்த் கபீர்’ விருதையும் ஒரு நெசவாளர் பெறுகிறார்.
மத்திய அரசு, நெசவாளர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருது ‘சந்த் கபீர்’ விருதாகும். 2018-ம் ஆண்டுக்கான ‘சந்த் கபீர்’ விருது இந்திய அளவில் 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மேட்டுப்பாளையம் தெருவைச் சேர்ந்த நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி பெயரும் இடம் பெற்றுள்ளது. நிறைய நெசவாளர்களுக்கு பயிற்சி அளித்தது, வழக்கமான சேலைகளுக்கு மாற்றாக 114 வடிவமைப்புகளை சேர்த்து சேலை நெய்தது ஆகிய காரணங்களுக்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது 20 பேருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் 6 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் தர்மலிங்கம் நகரைச் சேர்ந்த சரளா - கணபதி தம்பதி மற்றும் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த காமாட்சி - ஹரி தம்பதி இணைந் தும், கணிகண்டீஸ்வர் கோயில் தெருவைச் சேர்ந்த ராம்குமாரி, ராயன்குட்டை பிள்ளை தெருவைச் சேர்ந்த ஹரி ஆகியோர் தனித்தனியாகவும் தேசிய விருதை பெறுகின்றனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 நெசவாளர்கள் 4 தேசிய விருதுகளை பெறுகின்றனர். சிறந்த வடிவமைப்பு, சிறந்த தொழில் நுட்பங்களை கைத்தறியில் பயன்படுத்தியது, சிறந்த வண்ணங்கள் ஆகிய காரணங்களுக்காக இவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தேசிய சிறப்புச் சான்றிதழை காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், சீனுவாசன் ஆகியோர் இணைந்து பெறு கின்றனர். தேசிய விருதுகளுக்கான தகுதிகளின் அடிப்படையிலேயே இவர் களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதுக்கு தேர்வானவர்களுக்கான அறிவிப்பு சான்றிதழை நெசவாளர் சேவை மைய உதவி இயக்குநர் (வடி வமைப்பு) ஆர்.சசிகலா வழங்கினார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘சந்த் கபீர் விருது பெறுபவருக்கு ரூ.3 லட்சம், தங்க நாணயம், தாமிரப் பத்திரமும், தேசிய விருது பெறுவோருக்கு ரூ.1.5 லட்சம், தாமிரப்பத்திரமும், தேசிய சிறப்புச் சான்றிதழ் பெறுபவருக்கு ரூ.75 ஆயிரம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். விருது வழங்கும் விழா தேதியை மத்திய அரசு அறிவிக்கும்’’ என்றார்.