ஐந்து நாட்களாக பிடிபடாமல் சுற்றித் திரியும் புலியின் நடமாட்டத்தை, ‘தெர்மல் இமேஜிங்’ கேமரா மூலமாக கண்காணிக்கும் பணிகளை வனத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட வுட்பிரையர் எஸ்டேட்டில், கடந்த 11-ம் தேதி வட மாநிலத் தொழிலாளியை புலி தாக்கிக் கொன்றது. புலியை பிடிக்க 10 கூண்டுகளும், அதன் நடமாட்டத்தை கண்காணிக்க 48 கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன. மறுநாளே, கேமராவில் அதன் உருவம் பதிவானது. 8 வயதுக்குட்பட்ட ஆண் புலியின் இடது முன் காலில் காயம் இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அப் பகுதியில் புலி நடமாட்டம் காணப்படவில்லை; கேமராக்களிலும் அதன் உருவம் பதிவாகவில்லை.
கன்றுக்குட்டி பலி
இந்நிலையில், தேவர்சோலை போலீஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை கன்றுக்குட்டியை தாக்கிக் கொன்றுள்ளது. இதையடுத்து, வுட்பிரையர் எஸ்டேட், தேவர்சோலை பகுதிகளில் மரக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நவீன கேமரா
இந்நிலையில், இரவு நேரத்தி லும் புலியின் நடமாட்டத்தை கண் காணிக்க, பெங்களூருலிருந்து உடல் வெப்பம் அறியும் ‘தெர்மல் இமேஜிங்’ கேமரா கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை, ‘டச்வுட்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கொண்டு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி ராஜ் கூறும்போது, “இந்த கேமராவில் சுமார் 300 மீட்டர் தூரத்திலுள்ள அனைத்து நடமாட்டமும் தெரியும். உடல் தட்ப, வெப்பத்தை கணக்கிட்டு, நடமாட்டத்தை அறிய முடியும். புலியின் நடமாட்டத்தை எளிதில் அறிய முடியும்” என்றார்.
தீவிர ரோந்து
தொழிலாளியை கொன்ற பகுதியிலேயே புலியின் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து, கண்காணிப்புப் பணியை வனத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை மண்டல வனப் பாதுகாவலர் அன்வர்தீன் தலைமையில், வனத் துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.