ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் மக்கள் செல்வாக்கை இழந்த திமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தொண்டர்கள், வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்
கிணைப்பாளர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் மக்கள் பேரியக்கமான அதிமுகவுக்கு தேர்தல் புதிதல்ல. கடந்த காலங்களில் தேர்தல்களை நேர்மையாக, நியாயமாக சந்தித்து மக்களின் ஏகோபித்த பேராதரவை பெற்று மக்கள் பணி ஆற்றி உள்ளோம். ஜெயலலிதா அறிவித்த அனைத்து மக்கள் நலன் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளையும் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றியது. உள்ளாட்சிகளில் ஒரு நல்லாட்சியை அதிமுகவால் மட்டுமே தர முடியும். எனவே, அதிமுகவுக்கு எப்போதும் பேராதரவை நல்குமாறு வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறோம்.
அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 முறையும், சட்டப்பேரவை பொதுத் தேர்தலை ஒரு முறையும், நாடாளுமன்ற தேர்தலை 2 முறையும் ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் வாக்காளர்களை மட்டுமே நம்பி நடத்தினோம்.
ஆனால், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதைஎதிர்த்து அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன்மூலம் கடும் உத்தரவுகளை அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சட்டம், நீதிமன்றம், மக்கள் மன்றத்தை மதிக்காத திமுக,இந்த உத்தரவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் ஏகோபித்தஆதரவை அதிமுக பெற்றபோதிலும், எந்த காலத்திலும் நிறைவேற்ற இயலாத, உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்து, அதை மக்கள் முழுமையாக நம்பக்கூடிய சூழலையும் உருவாக்கி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றனர்.
தற்போது நடக்க உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் இதுபோன்ற மாயத் தோற்றத்தை உருவாக்க திமுக முயற்சிக்கும். பொய்யை சொல்லி கடந்த 4 மாதத்தில் மக்களிடம் செல்வாக்கை இழந்த திமுக, இந்த தேர்தலிலும் அதே பாணியை கையாண்டு, உள்ளாட்சி பதவிகளை கைப்பற்ற அரசு இயந்திரங்களையும், அதிகாரிகளையும் தன் கைப்பாவையாக மாற்றி வெற்றி பெற முயலும். எனவே, அதிமுக தொண்டர்கள் கூடுதல் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். வாக்குப்பதிவை முகவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
4 மாதங்களில் மக்கள் செல்வாக்கை இழந்த திமுக அரசுக்குஅதிமுக தொண்டர்கள், வாக்காளர்கள் இத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.