மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள 46 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மைதானத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தனியார் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட கபாலீஸ்வரர் கோயில் இடம் மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இந்த இடத்துக்கான வாடகை நிலுவை தொகை ரூ.1 கோடியை பள்ளி நிர்வாகம் தரவேண்டியுள்ளது. முதல் தவணையாக ரூ.18 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் விளையாடுவதற்காக இந்த மைதானம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளக்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.1,130 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு சொந்தமான இடங்களில் எல்லைக் கல்ஊன்றி, அறநிலையத் துறைஎன எழுதப்படும்.
கோயில்களுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை உருக்கி,வங்கிகளில் முதலீடு செய்து, அதன் வட்டி மூலமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஓய்வு பெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் குறித்துதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்விஎழுப்பினர். அதற்கு சேகர்பாபு, ‘‘அனைத்து திறமைகளும் கொண்ட திமுக தலைவரின் அரசியல் வயது 50 வருடங்களையும் கடந்தது. அவரை விமர்சிக்கிற புதிய தலைவரின் அரசியல் வயதை கணக்கிட்டு பார்க்க வேண்டும்’’ என்றார்.
‘‘அறநிலையத் துறை தேவை இல்லை, இந்து கோயில்களை இந்துக்களே ஆள வேண்டும். போராட்டம் நடத்தினால்தான் கோயில்களை நம் வசம் கொண்டு வர முடியும்’’ என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியுள்ளது குறித்து கேட்டதற்கு, ‘‘நியாயமான செயலுக்கு தலை வணங்க காத்திருக்கிறோம். போராட்ட அச்சுறுத்தலுக்கு இந்த அரசு அடிபணியாது. அரசியலில் களம் இல்லாதால், அவர் தினந்தோறும் ஏதாவது ஒன்றை கூறுகிறார்’’ என்றார்.