மாநகராட்சி அதிகாரிகள் நாளிதழ்களை தினமும் படித்து, மக்கள் பிரச்சினைகள் தொடர்பான செய்திகளை வாட்ஸ் அப்பில் பதிவிட வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும், மாநகராட்சி நிர்வாக பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்தும் நாளிதழ்களில் தினமும் செய்திகள், விமர்சனங்கள் வெளியிடப்படுவது வழக்கம்.
இந்தச் செய்திகள் அனைத்தும் தனி தொகுப்பாக மாற்றப்பட்டு, மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் நாள்தோறும் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் ஆணையரின் உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள், செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வர்.
ஆனால், அண்மைக்காலமாக நாளிதழ்களில் சுட்டிக்காட்டப்படும் பிரச்சினைகளுக்குக்கூட உரிய தீர்வு ஏற்படுத்த, அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், சில அதிகாரிகளுக்கு நாளிதழ்களைப் படிக்கும் பழக்கம் இல்லாததால், பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்த செய்தியை அவர்களால் அறிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. நாளிதழ்களில் வந்த செய்திகள் குறித்து ஆணையரிடமிருந்து உத்தரவு வரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், புதிதாக வந்துள்ள மாநகராட்சி ஆணையர் என்.எஸ்.பிரேமா, இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் வகையில் தற்போது அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை எழுத்துப்பூர்வமாக பிறப்பித்துள்ளார்.
அதில், மாநகராட்சி தொடர்பாக நாளிதழ்களில் வரும் செய்திகளை மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாகப் படிக்க வேண்டும்.
புகார் தொடர்பான செய்திகள் இருந்தால், அதன்மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களை உடனுக்குடன் வாட்ஸ் அப் மூலம் தனக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனை மாநகராட்சி உயர் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, நாளிதழ்களில் வெளியாகும் மாநகராட்சி மற்றும் தேர்தல் தொடர்புடைய செய்திகளை, மாநகராட்சி அதிகாரிகளுக்கான வாட்ஸ் அப் குழுவில் தினமும் பதிவிட வேண்டும் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
14 பேர் கொண்ட குழு அமைப்பு
மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி, 14 முக்கிய நாளிதழ்களைப் படித்து, அதில் வரும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான செய்திகளை மாநகராட்சி அதிகாரிகளுக்கான வாட்ஸ் அப் குழுவில் பதிவிடுவதற்காக உதவி செயற்பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் அடங்கிய 14 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு நாளிதழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.