அரியலூர் மாவட்டம் ஆண்டி மடத்தில் குடும்பத் தகராறில் மனைவி, மகன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவர், தானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும் புதூரைச் சேர்ந்தவர் சுப்பிர மணி(47). இவர், தனது மனைவி நிர்மலா(40), மகன் ரோகன்(15) ஆகியோருடன் அரிய லூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் வசித்து வந்தார்.
ஜெயங்கொண்டத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ் தாவாக பணியாற்றி வந்த சுப்பிரமணி, அண்மைக்காலமாக வேறு சில பெண்களுடன் கூடா நட்பு வைத்திருந்ததாகக் கூறப் படுகிறது. இது தொடர்பாக, சுப்பிர மணிக்கும், நிர்மலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால், ரோகன் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த வுடன் கணவரைவிட்டு பிரிந்து செல்வதென நிர்மலா முடிவு செய்திருந்தாராம்.
இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு திரும்பிய சுப்பிரமணி, முதலில் தன்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டுள்ளார். பின்னர், வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த நிர்மலா, ரோகன் ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு, இருவரையும் கட்டிப் பிடித்துக்கொண்டாராம்.
எனினும், அவரது பிடியில் இருந்து தப்பிய ரோகன், உடலில் பற்றிய தீயுடன் வெளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளின் கதவைத் தட்டி உதவி கேட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிமடம் போலீஸார் விரைந்து வந்து, பலத்த தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிய ரோகன், நிர்மலா ஆகியோரை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வெளியே உடல் கருகிய நிலையில் கிடந்த சுப்பிரமணியின் சடலத்தையும் மீட்டனர்.
தொடர்ந்து, ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நிர்மலா உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ரோக னும் உயிரிழந்தார்.
முன்னதாக, நடந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில், போலீஸாரிடம் ரோகன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணை
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுப்பிரமணி ஏற்கெனவே திருமணமாகி, முதல் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, பின்னர் நிர்மலாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது.