திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸார் | படங்கள்: ஜி.ஞானவேல்முருகன். 
தமிழகம்

உ.பி. மட்டுமின்றி நாட்டில் இருந்தே பாஜக அகற்றப்படும்: திருச்சியில் கைது செய்யப்பட்ட ஜோதிமணி கருத்து

ஜெ.ஞானசேகர்

விவசாய விரோத பாஜக அரசுக்குத் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று மக்களவை கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் செ.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் கார் மோதியும், வன்முறையிலும் விவசாயிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற பிரியங்கா காந்தியை போலீஸார் கைது செய்ததைக் கண்டித்தும் திருச்சியில் காங்கிரஸார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன், கலை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் செ.ஜோதிமணி, கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்கள் சுப.சோமு, சுஜாதா மற்றும் நிர்வாகிகள் ராஜா நசீர், வழக்கறிஞர் சரவணன், ரெக்ஸ் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார், திடீரென அங்கிருந்து தெப்பக்குளம் அஞ்சல் நிலையம் அருகே சென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் ஜோதிமணி கூறும்போது, ''வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த ஓராண்டாக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் அமைதி வழியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, மத்திய உள்துறை இணையமைச்சர் மகன் சென்ற கார் மோதி விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். இதற்காக விவசாயிகளுக்கு ஆதரவாகக் களத்துக்குச் சென்ற பிரியங்கா காந்தியை போலீஸார் கைது செய்தனர். ஆனால், மத்திய உள்துறை இணையமைச்சரின் மகன் கைது செய்யப்படவில்லை. கைது நடவடிக்கைகளுக்கு பிரியங்கா காந்தியோ அல்லது காங்கிரஸாரோ பயப்படமாட்டார்கள்.

எனவே, மத்திய உள்துறை இணையமைச்சர் பதவி விலக வேண்டும். அவரது மகனைக் கைது செய்ய வேண்டும். பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். விவசாய விரோத பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி நாட்டில் இருந்தே பாஜக அகற்றப்படும். அந்த யுத்தத்தை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் முன்னின்று நடத்தும்'' என்று ஜோதிமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT