பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்: சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்.பி. தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

எஸ். நீலவண்ணன்

பெண் ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்.பி. தாக்கல் செய்த 2 மனுக்களை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்தார். இது தொடர்பாக சிறப்பு டிஜிபி மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியைப் பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று நடுவர் கோபிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது செங்கல்பட்டு எஸ்.பி. நேரில் ஆஜரானார். சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, சிறப்பு டிஜிபி வராதது குறித்து மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

இதனிடையே, சிறப்பு டிஜிபி தரப்பில், இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்ற வரம்பிற்குள் வராது. எனவே, வேறு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், எஸ்.பி. தரப்பில் வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எனவே, வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு மனுக்களும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இருதரப்பு வாதங்கள் நடைபெற்று வந்தன. நேற்று மீண்டும் இந்த மனு மீதான இருதரப்பு வாதம் முடிவடைந்தது. தொடர்ந்து இந்த மனு மீது விசாரணை நடத்திய நடுவர் கோபிநாதன், டிஜிபி, எஸ்.பி. தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், செங்கல்பட்டு எஸ்.பி. மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் அவரை வழக்கிலிருந்து விடுவிக்கமுடியாது என்றும் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நடுவர் கோபிநாதன் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT