சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம் 
தமிழகம்

தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தப் போவதில்லை: உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைக்குத் தேர்தலை நடத்தப் போவதில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, முத்தியால்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரகேஷ் குமார் உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக, சட்டத்தை மீற முடியாது எனக் கருத்து தெரிவித்து, புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று (அக். 04) விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்போவது இல்லை என்பதால், அக்டோபர் 21 முதல் நடத்த உள்ள தேர்தலைத் தள்ளிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை அக்டோபர் 7-ம் தேதி தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் முதல்வர் முடிவெடுக்க உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

வார்டுகள் ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளுக்குத் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, அதுவரை வேட்பு மனுக்கள் பெறுவதைத் தள்ளிவைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் முடிவைத் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நாளை (அக். 05) மாலை தள்ளிவைத்து உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT