தமிழகம்

புதுச்சேரி, காரைக்காலில் போலி மதுபானம் உற்பத்தி; தமிழகத்துக்குக் கடத்தல்: அதிமுக குற்றச்சாட்டு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி, காரைக்காலில் போலி மதுபானம் உற்பத்தி செய்து தமிழகத்துக்குக் கடத்தப்படுகிறது. அரசின் தொடர் அலட்சியத்தால் புதுச்சேரி மாநிலம் மதுபானம் கடத்தல் பிராந்தியமாக மாற்றப்பட்டு வருகிறது என்று ஆளும் கூட்டணிக் கட்சியான அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலர் அன்பழகன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

"புதுச்சேரி, காரைக்காலின் பல பகுதிகளில் இருந்தும் போலி மதுபானங்கள், போலி மதுபானத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, அண்டை மாநிலமான தமிழகத்திற்குக் கடத்தப்படுவது அன்றாட நிகழ்வாக உள்ளது. புதுவையில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும், காரைக்காலில் இருந்து திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் போன்ற பல மாவட்டங்களுக்கும் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கடத்தப்படுவதையும், போலி மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்த கலால்துறையில் போதுமான பணியாளர்கள் இல்லாததும் ஒரு காரணமாகும்.

புதுவையில் வரி செலுத்தி உற்பத்தியாகும் மதுபானங்கள் கடத்தப்படுவதில்லை. போலி மதுபான ஆலைகள் மூலம் உற்பத்தியாகும் மதுபானங்கள்தான் கடத்தப்படுகின்றன என்பதை அரசு அறியாமல் அலட்சியத்துடன் நடந்துகொள்கிறது.

போலி மதுபானம் உற்பத்தி செய்து கடத்துவதில் பல முக்கியப் புள்ளிகள் தொடர்பிலும் உள்ளனர். இவ்வாறு போலி மதுபானத் தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் முழுமையாக பாதிக்கப்பட்டு வருவதை அரசும் உணர்வதில்லை.

அரசின் தொடர் அலட்சியத்தால் புதுவை மாநிலம் என்பது மதுபானம் கடத்தல் பிராந்தியமாக மாற்றப்பட்டு வருகிறது. போலி மதுபானக் கடத்தலைத் தடுக்கவும், கண்காணிக்கவும், கலால், காவல், வருவாய்த்துறை இணைந்த உயர்மட்டக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்".

இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT