தமிழகம்

மசினகுடியில் ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்கும் பணி 10-வது நாளாகத் தொடர்கிறது: தேடுதல் வேட்டையில் கும்கி யானைகள், நாய்கள்

ஆர்.டி.சிவசங்கர்

மசினகுடியில் ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்கும் பணி 10-வது நாளாகத் தொடர்கிறது. தேடுதல் வேட்டையில் கும்கி யானைகள், நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுக்கா தேவன் எஸ்டேட், முதுமலை, ஸ்ரீமதுரை ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதர்களையும் புலி அடித்துக் கொன்றது. இந்தப் புலியைப் பிடிக்கும் பணி 10ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இரண்டு குழுக்களாகப் பிரிந்து காட்டுக்குள் சென்ற அதிரடிப் படை மற்றும் வனத் துறையினர் புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோவையிலிருந்து உயரடுக்குப் பாதுகாப்புப் படையினரும் தேடும் பணியில் ஈடுபட வந்துள்ளனர். எனினும் புலியின் இருப்பிடம் இதுவரை தென்படவில்லை.

புலியைத் தேடும் பணியை ஆய்வு செய்த தமிழ்நாடு வன உயிரின முதன்மை வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், ‘புலியை உயிருடன் பிடிப்பதுதான் வனத்துறையின் நோக்கம்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், புலியைத் தேடும் பணிக்குத் தலைமை வகித்துள்ள முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் வெங்கடேஷ் மற்றும் துணை கள இயக்குநர்களிடம் ஆலோசனை நடத்தினார். வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனும் அலுவலா்களிடம் ஆலோசனை நடத்தி விவரங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து மசினகுடி பகுதியில் வசிக்கும், புலி தாக்கி இறந்த குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

புலியைத் தேடும் பணியில் கும்கி யானைகள், நாய்கள்

மசினகுடி வனப்பகுதியில் புலியைத் தேடும் பணிக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், அதவை மற்றும் ராணா ஆகிய மோப்ப நாய்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 3 ட்ரோன் கேமராக்கள் மூலம் புலியைக் கண்காணிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT