ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 'தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்' எனப் பெயர் சூட்டி, பெயர்ப் பலகையைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 04) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் 1904-ம் ஆண்டு நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த திருப்பூர் குமரன் என்று அழைக்கப்படும் குமாரசாமி, திருப்பூரில் 1932-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தேசத்துக்காகத் தன் உயிரைத் துறந்தார்.
அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஈரோடு மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு 'தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்' எனப் பெயர் மாற்றம் செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சியர் வழியாக அரசின் அனுமதி பெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தியாகி திருப்பூர் குமரனின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் பொருட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு 'தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்' எனப் பெயர் சூட்டி 3.10.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி கொடி காத்த குமரனின் பிறந்த நாளையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு 'தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்' என்று பெயர் சூட்டி, பெயர்ப் பலகையைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.