தமிழகம் முழுவதும் 4-வது கட்டமாக 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட்ட மெகா முகாம் மூலமாக 17.19லட்சம் பேருக்கு கரோனாதடுப்பூசி போடப்பட்டது.
கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மெகா தடுப்பூசி முகாம் நடத்த அரசு முடிவு செய்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.41 லட்சம் பேருக்கும், 26-ம் தேதி 23 ஆயிரங்களில் 24.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில், 4-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நேற்று நடந்தது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை நடந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சில இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தேனி, சிவகங்கை மாவட்டங்களில் நடந்த முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆய்வு செய்தனர். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த முகாம்களை துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
சென்னையில் 1.50 லட்சம்உட்பட தமிழகம் முழுவதும் நேற்று17.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இன்று மையங்கள் செயல்படாது
நேற்று சிறப்பு முகாம்களில் பணியில் ஈடுபட்ட சுகாதாரத் துறையினருக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.