புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் செயல்பட்டு வந்த தனியார் பெண் குழந்தைகள் காப்பகம் பூட்டி, சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த காப்பகத்தை நடத்தி வந்த அரசுப் பள்ளி ஆசிரியை, அவரது கணவர் மீது நேற்று காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடுமியான்மலையில் தனியார் குழந்தைகள் காப்பகம் கடந்த 2019 முதல் செயல்பட்டு வந்தது. இதற்கு குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை கலைமகள் தலைவராகவும், அவரது கணவர் ராஜேந்திரன் கண்காணிப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர்.
இந்த காப்பகம் தொடங்கப்பட்ட காலத்தில் ஆதரவற்ற மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 19 குழந்தைகள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், இங்கு வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொண்டு, குழந்தைகளை முறையாக பராமரிக்காமல், அவர்களுக்கு காப்பகத்தினரே தொல்லை கொடுப்பதாக ஜூன் 1-ம் தேதி சைல்டுலைன் உதவி எண் 1098-க்கு புகார் வந்தது.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தினர் அந்த காப்பகத்துக்குச் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது, குழந்தைகளை கட்டிட வேலை மற்றும் வயல் வேலைக்கு பயன்படுத்தியது தெரியவந்ததால், அங்குள்ள குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், அதையும் மீறி காப்பகத்தில் குழந்தைகளை தங்கவைத்திருந்தது குறித்து தகவல் வந்ததால், செப். 8-ம் தேதி குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தினர் மீண்டும் காப்பகத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த 7 குழந்தைகளையும் மீட்டு, வேறொரு காப்பகத்தில் தங்கவைத்தனர்.
தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குணசீலி அளித்த புகாரின்பேரில், கலைமகள், ராஜேந்திரன் ஆகியோர் மீது நம்பிக்கை துரோகம் செய்தது, தகாத வார்த்தையில் திட்டியது, தாக்கியது , குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சிறப்பு சட்டம் 2015 என மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் அன்னவாசல் காவல் நிலையத்தில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குணசீலி அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, ஆட்சியர் கவிதா ராமு உத்தரவின்படி, பெண் குழந்தைகள் காப்பகமானது 2 நாட்களுக்கு முன்பு மூடி சீல் வைக்கப்பட்டது.