மசினகுடி அருகே 4 பேரை கொன்ற புலியை சுட்டுக்கொல்ல வன உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 4 பேரை தாக்கிக்கொன்றதாக கூறப்படும் புலியை, ‘டி-23’ என வனத்துறையினர் அடையாளப்படுத்தி, தேடி வருகின்றனர். இதன் உடலில் உள்ள வரிகள் தானியங்கி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேடுதல் பணிக்காக, தெப்பக்காடு- மசினகுடி சாலையில், நேற்று வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, வனத்துறையினர் கூறும்போது, “புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. வன விலங்கு பாதுகாப்பு சட்டப்படி புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேடுதல், பொறிவைத்துப் பிடித்தல், அமைதிப்படுத்துதல் நடவடிக்கைகள் பலன் தராத நிலையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய சூழலில் புலியை பிடிக்கவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தேடப்படும் புலிக்கு, 14 வயது இருக்கும்.
வரிதான் அடையாளம்
மனிதரின் கைரேகை எவ்வாறு ஒரேமாதிரி இருக்காதோ, அதேபோல புலியின் உடலில் உள்ள வரிகளும், ஒவ்வொரு புலிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். கால்தடங்களும் (பக்மார்க்) வேறுபடும். புலிகள் கணக்கெடுப்பில், அதன் வரிகள், கால்தடங்களை வைத்துதான் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. ‘டி-23’ புலியின் உடலில்உள்ள வரிகள், தேடுதல் குழுவினருக்கு முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. பிரத்யேகப்பயிற்சி பெற்ற 20 பேர் அடங்கிய ஐந்து அதிரடிப்படைக் குழுவினர் புலியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்” என்றனர்.
இந்த புலியை சுட்டுப்பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
அடர்வனத்தில் விட வேண்டும்
‘டைகர்’ பாலு, சுற்றுச்சூழல் ஆர்வலர்: ஒரு புலியை சுட்டுக்கொல்ல அனுமதி வாங்கிவிட்டு வேறு புலியை சுட்டுக்கொல்லவும் வாய்ப்பு உள்ளது. இந்த தவறு நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கேட்டால், அந்தப்புலிதான் இது என்பார்கள்.
மனிதர்கள் அடுத்த தலைமுறைக்குகூட சொத்து சேர்த்து வைத்திருக்கின்றனர். புலிக்கு தேவை அடுத்தவேளை உணவுதான். அதுகிடைத்துவிட்டால், அருகில் இருக்கும் இரையைக்கூட புலி தாக்காது. புலி எண்ணிக்கையில் குறைந்துவரும் இனம் என்பதால், அதை சுட்டுக் கொல்லக்கூடாது. மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்வனத்தில் கொண்டுபோய் விட வேண்டும்.
பேராசிரியர் ஜோசப் கிளமன்ட், முன்னாள் தாவரவியல் துறை தலைவர், அரசு கலைக்கல்லூரி, கோவை: மனிதர்களின் ரத்தத்தை ருசி பார்த்துவிட்டால் அதை நோக்கி மீண்டும் செல்வது மிருகங்களின் இயல்பு. மனிதர்கள் செய்யும் கொலைக் குற்றத்துக்கு விதிக்கப்படும் தண்டனைகள்கூட மேல்முறையீட்டில் குறைக்கப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு இப்படியான விதிமுறைகளை வைத்துக்கொண்டு, விலங்குகளை மட்டும் வேறுபடுத்தி பார்க்கிறோம். புலியை சுட்டுக்கொல்வதைவிட அதை பாதுகாப்பாக பிடித்து, வன உயிரின பூங்காவில் கொண்டுபோய் விட வேண்டும்.
உணவுச் சங்கிலி
முரளீதரன், சமூக ஆர்வலர்: எந்த மிருகமும் அது வாழும் இடத்தில் இடையூறு செய்தால் எதிர்ப்பு தெரிவிக்கும். உணவுச் சங்கிலியில் புலி முக்கியமான உயிரினம். அதைக் கொல்வது என்பது மிகப்பெரிய இழப்பு. ஒரு புலியை யாராலும் உருவாக்க முடியாது. எனவே, அதைப்பிடித்து பாதுகாக்கப்பட்ட அடர்வனத்தில் விடுவிக்க வேண்டும்.
சுப்பிரமணியன் சொக்கலிங்கம், வன உயிரின ஆர்வலர்: மனிதர்களை இந்த குறிப்பிட்ட புலிதான் தாக்குகிறது என்பதற்கு எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லை. எனவே, புலியை உடனடியாக கொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாலை விபத்துகளால் தினமும் பலர் உயிரிழக்கின்றனர். அதற்காக, சாலைகளை மூடிவிடுவது இல்லையே.
ஆஷிக், வழக்கறிஞர்: புலிகளின் எண்ணிக்கையை காப்பாற்ற மத்திய அரசு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் செலவு செய்கிறது. எனவே, புலியையும் காப்பாற்ற வேண்டும். மனிதர்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதுபோன்ற நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.