தமிழகம்

கொலையாளிகளின் 8 மாத திட்டம், 8 நாட்களில் அரங்கேற்றம்: போலீஸ் விசாரணையில் தகவல்

செய்திப்பிரிவு

8 மாத கொலை திட்டத்தை 8 நாட்களில் 5 பேர் கொண்ட கும்பல் அரங்கேற்றியுள்ளது விசாரணை யில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சங்கர் கொலை தொடர்பாக கைதானவர்களிடம் தனிப்படை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் கூறியதாவது:

8 மாதங்களாக குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனின்றி போகவே கவுசல்யா வின் தந்தை சின்னச்சாமிக்கு, இத்திட்டத்தை நிறைவேற்ற அவரின் நெருங்கிய நண்பரும், அதே சமூகத்தைச் சேர்ந்தவருமான ஜெகதீசனின் உதவி தேவைப்பட்டிருக்கிறது.

ஜெகதீசனின் நெருங்கிய நண்பரான பழநியைச் சேர்ந்த மணிகண்டனும் உதவ முன்வந்துள்ளார். பின்னர் சின்னச்சாமியின் உறவினர்களான செல்வக்குமார், மதன் ஆகியோரையும் இத்திட்டத்தில் சேர்த்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பொன் மாந்துறையைச் சேர்ந்த தன்ராஜ் என்பவரை உளவு பார்க்கும் வேலையில் ஈடுபடுத்தியுள்ளனராம். கொலை நடப்பதற்கு 8 நாட்கள் முன்பிருந்து, சங்கர்-கவுசல்யா நடவடிக்கைக்களை இந்த டீமுக்கு உடனுக்குடன் இவர் தெரிவித்து வந்தாராம்.

கொலையான அன்று, அவர்கள் கடைக்குச் சென்று துணி வாங்கிக் கொண்டு வருவதைக் கூட இவர்தான், கொலை டீமுக்கு தகவல் கொடுத்து அவர்களை பின்தொடர்ந்தும் வந்துள்ளாராம். கொலை நடப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு, கூட்டத்தோடு கூட்டமாக தலைமறைவாகிவிட்டதாகவும் தெரியவருகிறது. இவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 8 மாதங்களாக நிறைவேறாத இத்திட்டத்தை 8 நாட்களில் இந்த ‘டீம்’ செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT