வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இன்று உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (70). இவர் நாமக்கல், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியராகவும், வணிக வரித்துறையின் இணை இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், தனது சொந்த கிராமமான வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு அவ்வப்போது வருவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தரமூர்த்தி வடக்குப்பட்டு கிராமத்துக்கு வந்தார். பண்ணை வீட்டில் இருந்தபடி விவசாய நிலத்தைப் பராமரித்து வந்தார். வடக்குப்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் விவசாய நிலத்தில் உள்ள கொய்யா மரத்தின் கிளைகள் நீண்டு வளர்ந்திருந்தன.
கொய்யா மரக் கிளைகள், மேலே உள்ள மின்கம்பிகள் மீது படர்ந்து வருவதைக் கண்ட சுந்தரமூர்த்தி, கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் இன்று மதியம் ஈடுபட்டார். அவ்வாறு கிளைகளை வெட்டும்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததால், அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே, அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சுந்தரமூர்த்தியின் மனைவி சென்னையிலும், மகன்கள் வெளிநாடுகளிலும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.