100% குடிநீர் தேவையை பூர்த்தி செய்துகொண்ட வெள்ளேரி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.சுதா உள்ளிட்டோரிடம் காணொலியில் கலந்துரையாடிய பிரதமர் மோடி. 
தமிழகம்

மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் மூலம் எனது சகோதரிகளுக்கு தேவையான குடிநீர் கிடைத்துள்ளது: வெள்ளேரி ஊராட்சி மன்றத் தலைவருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பெருமிதம்

செய்திப்பிரிவு

‘ஜல் ஜீவன்' திட்டத்தின் மூலம் எனது சகோதரிகளுக்கு அவர்கள் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த, தேவையான குடிநீர் கிடைத்துள்ளது என பிரதமர் மோடி பெருமையுடன் தெரிவித்தார்.

மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்' திட்டத்தின்கீழ், இந்தியாவில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு கொடுத்துள்ள 5 ஊராட்சிகளைத் தேர்வு செய்து, அந்த கிராம மக்களிடம் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 5 ஊராட்சிகளில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வெள்ளேரி ஊராட்சியும் அடங்கும்.

மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின்கீழ் வெள்ளேரி ஊராட்சியில் உள்ள 412 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு, 100 சதவீதம் குடிநீர் தேவையை பூர்த்திசெய்த ஊராட்சியாக திகழ்கிறது.

இதையடுத்து வெள்ளேரி கிராமத்தில் நேற்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.சுதாவிடம் ‘வணக்கம்’ எனக் கூறி பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதன் விவரம் வருமாறு:

பிரதமர் மோடி: தமிழகத்துக்கு பலவருடங்களாக வந்துகொண்டிருக்கிறேன். நான் எப்போதும், தமிழகத்தைகவுரமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்களது ஆரணி பட்டு புகழ் பெற்றது. பட்டு குறித்த பெருமையை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தலைவர் சுதா: எங்கள் ஊராட்சியில் 20 சதவீத குடும்பத்தினர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். ஆரணி பட்டு புகழ்பெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி: ஊராட்சி மன்றத் தலைவர் சுதா ஜி அவர்களே, உங்களது கிராமத்தில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதனால், பட்டுத்தறி நெசவுப் பணியில் உங்களது நேரத்தை கூடுதலாக செலவிடுவீர்கள் இல்லையா?.

தலைவர் சுதா: ஆமாம் ஐயா, குடிநீர் தேவை பூர்த்தியானதால், அதிக நேரத்தை சேமிக்க முடிகிறது.

பிரதமர் மோடி: உங்களது தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நீண்ட காலத்துக்கு உங்கள் கிராமத்தில் தண்ணீரை சேமிக்க, முயற்சி எடுத்துள்ளீர்களா?.

தலைவர் சுதா: தண்ணீரை சேமிக்க எங்கள் கிராமத்தில் 2 தடுப்பணைகள் கட்டியுள்ளோம். ஏரி மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 2 பண்ணை குட்டை அமைத்துள்ளோம்.

பிரதமர் மோடி: சுதா ஜி அவர்களே, உங்களுடன் இணைந்து செயல்பட்ட அனைவரது சிறப்பான முயற்சிக்கும் பாராட்டுகள்.

தலைவர் சுதா: குடிநீர் கிடைத்துள்ளதால் மக்களுக்கு மகிழ்ச்சி. அனைத்து பாராட்டுகளும் உங்களையே சாரும்.

பிரதமர் மோடி: ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, பெண்களின் வாழ்க்கையை எளிமையாக்கி உள்ளீர்கள். எனது சகோதரிகளுக்கு அவர்கள் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த, தேவையான குடிநீர் கிடைத்துள்ளது. உங்களது ஆசிர்வாதங்கள், எங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும். உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

முன்னதாக, ‘ஜல் ஜீவன்’ திட்ட சிறப்புச் செயலியை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தட்சணாமூர்த்தி, ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் எம்.பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT