தமிழகம்

நெசவாளர்களை உயர்த்துவோம்; கதராடை வாங்கி உடுத்துவோம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

எளிய மக்கள் நெய்த கதராடைகளை இளைஞர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் வாங்கி உடுத்தி பெருமையடைவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, ‘கதராடைகளை உடுத்துவோம்; நெசவாளர்களை உயர்த்துவோம்’ என்ற தலைப்பில் நேற்று அவர் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

உழவும், நெசவும் உன்னதப் பணிகள். ஒன்று, வயிற்றை நிறைக்கிறது; இன்னொன்று, உடலை மறைக்கிறது. நெய்யும் தொழில்பொறுமையும், பொறுப்பும் நிறைந்தது. பிசிறும், பிழையுமில்லாமல் உன்னிப்பாக பணியாற்றினால் மட்டுமே உயர்ந்த வகை ஆடைகளை நெய்தெடுக்க முடியும். தமிழகத்தில் தொன்றுதொட்டு நெசவை நேர்த்தியாக மேற்கொள்ளும் குடும்பங்கள் உள்ளன.அவர்கள் வாழ்வு சீரடைய வேண்டும் என்பதற்காக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

‘கதர்’ என்ற சொல் கிளர்ச்சி என்ற அடையாளம் கொண்டது. அந்நியர் ஆதிக்கத்துக்கு எதிராகஉள்ளூர் உடைகளையே உடுத்துவோம் என்ற அண்ணல் காந்தியடிகள் கையில் எடுத்த ஆயுதமாக கதர் இருந்தது.

தமிழகம் முழுவதும் 48 கதர் அங்காடிகள் உள்ளன. அவற்றின்மூலம் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கதர் பருத்தி,பாலிஸ்டர், கதர் பட்டு புடவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது.

விடுதலையடைந்து 75 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வேளையில், காந்தியடிகள் பிறந்தஇந்த இனிய நாளில் சிற்றூர்கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களையும், எளிய மக்கள் நெய்த கதராடைகளையும், அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் வகையில் இளைஞர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் வாங்கி உடுத்தி பெருமையடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT