"நாதஜ்யோதி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது
சென்னை திருப்புகழ்ச் சங்கமம் சார்பில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ‘நாதஜ்யோதி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பெரணம்பாக்கம் வி.விஸ்வநாதன் வரவேற்றார்.
திருமூலர் திருமந்திரப் பெருமன்றத்தின் அமைப்பாளர் ஆர்.மகாதேவன் நூலை அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். நூலின் முதல் பிரதியை சரஸ்வதி வாக்கேயகார டிரஸ்ட் அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியன் வெளியிட, முதல் பிரதியைதொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொண்டார்.
பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ், வயலின் வித்வான் ஸ்ரீராம் பரசுராம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் ஏற்புரையாற்றினார். நிறைவில் நூல் ஆசிரியரின் மகள் பவ்யா ஹரி நன்றி கூறினார்.
ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் பாடியுள்ள 66 திருத்தலங்களைப் பற்றிய விரிவான யாத்திரை நூல் இது. ஒவ்வொரு தலத்தின் வரலாறு, புராணம், இலக்கியம், சிற்ப கட்டிடக் கலை உள்ளிட்ட பல்வேறு விரிவான தகவல்கள் 464 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. தீட்சிதர் பாடியுள்ள 301 ஸ்தலக்கிருதிகள் விளக்கத்துடன் 24 வண்ணப் படங்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பாகும்.