தமிழகம்

திருச்சியில் ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வந்த ராணி மங்கம்மாள் கட்டிடம் ரூ.9.40 கோடியில் புனரமைப்பு: பழமை மாறாமல் புதுப்பிக்கிறது பொதுப்பணித் துறை

அ.வேலுச்சாமி

திருச்சியில் ஏற்கெனவே ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வந்த ராணி மங்கம்மாள் கட்டிடம் ரூ.9.40 கோடி செலவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது.

தென் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த நிலப்பரப்பு முழுவதும் ஆங்காங்கே அரண்மனைகள், குளங்கள், சாலைகள், அன்னதானச் சத்திரங்கள் எழுப்பி மக்களின் மனம் கவர்ந்தவராக விளங்கியவர் ராணி மங்கம்மாள். திருச்சி மற்றும் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு அவர் ஆட்சி செய்த கி.பி 17-ம் நூற்றாண்டில் இப்பகுதிகளில் கட்டிச் சென்ற எண்ணற்ற அடையாளங்கள் இன்றும் அவரது பெருமைகளை பறைசாற்றி வருகின்றன. திருச்சியைப் பொறுத்தமட்டில் கோட்டையிலுள்ள டவுன்ஹால், தற்போது அருங்காட்சியகமாகச் செயல்படும் கொலு மண்டபம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

உய்யக்கொண்டான் கரையில்..

இதுதவிர உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் பெரிய மிளகுபாறையை ஒட்டி எண்கோண வடிவில் முதல் தளத்துடன்கூடிய அரண்மனையும் கட்டப்பட்டுள்ளது. யானைகள் மற்றும் குதிரைகள் நிறுத்துமிடம், நந்தவனம், நீராடும் குளம், விருந்தினர் தங்குமிடம் என அக்காலத்தில் பரந்து விரிந்து காணப்பட்ட இந்த கட்டிடம், ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டது.

தற்போது இக்கட்டிடத்தில் மாவட்டக் கல்வி அலுவலகம், சித்த மருத்துவமனை, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், வருவாய்த் துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம், வருவாய் துறை ஆவண காப்பகம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. எனினும், மிகப் பழமையானது என்பதால் இக்கட்டிடத்தின் பெரும்பகுதி சேதமடைந்தன. ஆங்காங்கே செடிகள் வளர்ந்து காணப்பட்டன.

எண்கோண கட்டிடம்

வரலாற்றுச் சிறப்புமிக்க, பாரம்பரியக் கட்டிடம் என்பதால் இதை இடித்து அகற்றுவதற்கு பதிலாக பழமை மாறாமல் புதுப்பிக்க பொதுப்பணித் துறையின் பாரம்பரிய கட்டிடப் பிரிவு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து பொறியாளர்கள் குழுவினர் இங்கு வந்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தனர். அதன்தொடர்ச்சியாக இக்கட்டிடத்தைப் புனரமைக்க தமிழக அரசு ரூ.9.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் தொல்லியல் துறை மேற்பார்வையுடன் ராணி மங்கம்மாள் கட்டிடத்தை புனரமைக்கும் பணிகளில் பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கட்டுமான பிரிவு ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக ராணி மங்கம்மாள் கட்டிடத்திலேயே பெருமை மிகுந்ததாக கருதப்படும் எண்கோண வடிவிலான முதல்தள கட்டிடப் பகுதி தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது.

நாயக்கர் மகாலுடன் ஒப்பீடு

இதுகுறித்து பொதுப்பணித்துறை பாரம்பரியக் கட்டிடப் பிரிவின் செயற்பொறியாளர் எஸ்.மணிகண்டன் கூறியதாவது:

இந்த கட்டிடம் கட்டப்பட்ட காலம் குறித்து ஆவணங்கள் ரீதியாக முழுமையானத் தகவல்களை பெற முடியவில்லை. அதேசமயம் மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் மகால், ராணி மங்கம்மாள் அரண்மனை ஆகியவற்றின் கட்டுமானமும், இதன் கட்டுமானமும் ஒரே மாதிரியாக உள்ளன. விருந்தினர் இல்லம் போன்ற அமைப்புடன்கூடிய இந்த அரண்மனைக்கு, வெளிப்புற வாசலிலிருந்து முதல் தளத்திலுள்ள எண்கோண கட்டிடம் வரை யானையிலேயே செல்லக்கூடிய வகையில் தனித்துவமான பாதை வசதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த எண்கோண கட்டிடத்தின் மீது ஏறி நின்று பார்த்தால் உய்யக்கொண்டான் ஆற்றில் வரக்கூடிய வெள்ளப்பெருக்கை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

ஒன்றரை ஆண்டில் முடியும்

அக்காலத்திலேயே மிகவும் திட்டமிட்டு சிறப்பான வேலைப்பாடுகளுடன் செங்கல், சுண்ணாம்புக்காரை உள்ளிட்டவற்றின் கலவை கொண்டு கட்டப்பட்ட இதன் அஸ்திவாரம் இன்றளவும் வலுவாக உள்ளது. அதேசமயம் சுவர்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேற்கூரைகளும் சேதமடைந்துள்ளன. எனவே பாரம்பரிய கட்டிடங்களை பழமைமாறாமல் புதுப்பிப்பதில் நிபுணத்துவம் பெற்ற கோவில்பட்டி, வில்லிப்புத்தூர், கழுகுமலை, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆட்களை வரவழைத்து கட்டிடத்தின் உள்ளும், புறமும் பழமை மாறாமல் புனரமைப்பு செய்து வருகிறோம். இன்னும் ஒன்றரை ஆண்டில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT