புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் அகர்வால், புதிய ரயில் திட்டங்கள் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் அகர்வால் இன்று (அக். 02) சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வழியாக புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். ரயில் நிலைய நடைமேடைகள், டிக்கெட் வழங்குமிடம், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் பரிசோதகர் அறை, சர்வீஸ் லைன் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, புதுச்சேரி ரயில் நிலைய கண்காணிப்பாளர் தங்கராசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர், கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி முக்கியமான ரயில் நிலையமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாகவும் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் உள்ள வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன். ரயில் நிலையத்துக்குத் தேவையான வசதிகள் இருந்தாலும், ரயில்வே நிர்வாகம் சார்பில் மேலும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கான சில சிறிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
தண்ணீர் குழாய்கள் பதிப்பு, அதிவேக மின்பாதைகள் சீரமைப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பணியாளர்கள் ஓய்வறை கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு புதிய ரயில் திட்டங்கள் ஏதும் இல்லை. ஆனாலும், பெரிய திட்டமாக புதுச்சேரி ரயில் நிலையம் மறு சீரமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள ஆர்.என்.டி.ஏவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு நிறைவுக்குள் அப்பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
புதுச்சேரி - கடலூர் புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கு, இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. காரைக்கால் - பேரளம் ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை மேற்கொள்வதில், மாநில அரசு தொடர்பான சில பிரச்சினைகள் உள்ளதால், பணிகள் முழுமை பெறவில்லை. இது தொடர்பாக, மாநில அரசுடன் பேசி வருவதால், அதன் திட்டக் காலமான 2023-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வழக்கம் போல் புதிய ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "கரோனா தொற்று காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டது. எனினும், பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவையான முக்கிய ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. கரோனா தொற்று ஏற்ற, இறக்க நிலையில் உள்ளதால், வழக்கமான ரயில்கள் இயக்கப்படவில்லை. புதிய ரயில்கள் இயக்கம் குறித்து, ரயில்வே அமைச்சகம் தான் முடிவு செய்யும்" எனத் தெரிவித்தார்.