அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டுமென, ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் சுதா சுந்தரராமன் இன்று (அக். 02) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி பெண் மருத்துவர் கொடுத்த பாலியல் புகாரில் சிக்கிய கால்நடை துறை இயக்குநராக பணியாற்றிய பத்மநாபன் பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்தது மட்டும் போதாது. அவருக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவம் 2018-ல் நடைபெற்ற நிலையில், 3 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் தாமதமாகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
இதேபோல், இச்சம்பவத்துக்கு நியாயம் கேட்டுப் போராட்டம் நடத்திய 8 மாதர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இது போன்ற பாலியல் ரீதியான சம்பவங்கள் பல துறைகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, புதுச்சேரி அரசு அனைத்துத் துறைகளிலும் உடனடியாக உள்ளூர் புகார் குழு அமைத்து புகார்கள் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மாநில தலைவர் வாலண்டினா கூறுகையில், "புதுச்சேரி ஒரு சுற்றுலா தளம். இங்கு வரக்கூடிய பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை சில சம்பவங்கள் மூலம் முன்வைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அதேபோல், அரசு ஊழியர்களான உள்ள பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு வேண்டும் என கேட்டு வருகிறோம்.
உள்ளூர் புகார் குழு எல்லா அரசு அலுவலங்களிலும் அமைக்கப்படவில்லை. அனைத்துத் துறைகளிலும் இக்குழுவை அமைக்க வேண்டும். இதன் மூலம் பாலியல் புகார் வந்தால் இக்குழு உரிய விசாரணை நடத்தித் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் கூட அவருடன் பணிபுரிந்த பெண் எஸ்.பியிடம் மோசமாக நடந்து கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க ஜனநாயக மாதர் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், காவல்துறையை சார்ந்தவர் இருக்கக்கூடிய இடங்களில் கூட பாலியல் புகார் குழு அமைப்பதில் பலவீனம் இருந்தால், பெண்கள் பணியிடங்கள் தைரியமாக பணியாற்றுவதில் சிரமம் இருக்கும்" எனத் தெரிவித்தார். பேட்டியின்போது பிரதேச செயலாளர் சத்தியா, பொருளாளர் இளவரசி ஆகியோர் உடனிருந்தனர்.