தமிழகம்

தூய்மை இந்தியா, அம்ருத் திட்டங்களின் 2-ம் கட்ட பணிக்கு முதல்வர் வரவேற்பு

செய்திப்பிரிவு

கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் 2-ம் கட்டத்தை டெல்லியில்பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கரோனா தொற்றை வென்று அனைத்து மாநிலங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ருத் ஆகிய திட்டங்களின் 2-ம்கட்ட பணிகளை நான் வரவேற்கிறேன். நம் நாட்டில் நகரமயமாக்கல் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இதுபோன்ற திட்டங்கள் தேவையான ஒன்று.

இந்தியாவில் அதிக நகரமயமாக மாறிய மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. நகர்ப்புற மேம்பாட்டில் முன்னோடியாக விளங்கும் தமிழகம், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை பெருமளவு மேம்படுத்தி உள்ளது. கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் புதுமையான திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வரும் 2031-ம் ஆண்டைஎண்ணத்தில் வைத்து தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத சூழல், குப்பைகள் அற்ற நகரம், திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை திட்டம், கலைஞர்மேம்பாட்டு திட்டம், சிங்கார சென்னை 2-ம் கட்டம் என பல்வேறு பணிகளை தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. இப்போது பிரதமர் தொடங்கி வைத்துள்ள திட்டங்களை எங்கள் மாநில அரசின் மேம்பாட்டு திட்டங்களுடன் இணைத்து மக்கள் வாழ, நாட்டின் நகர்புற வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக விளங்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT