காந்தியடிகளின் நினைவுகள் எப்போதும் நீடித்திருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய அஞ்சல் துறை அவரை கவுரவிக்கும் விதமாக வெளியிட்ட அஞ்சல் தலைகள், அஞ்சல் அட்டைகள், உறைகளை கோவையை சேர்ந்த முன்னாள் அஞ்சல் அலுவலர் நா.ஹரிஹரன் சேகரித்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக பாதுகாத்து வருகிறார்.
காந்தியடிகள் மற்றும் கஸ்தூர்பா காந்தி தம்பதியாக உள்ள அஞ்சல் தலை தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், 1951-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் அட்டைகள், 1931-ம் ஆண்டு காந்தியடிகள் லண்டன் சென்றபோது நகைச்சுவை நடிகர் சார்ளி சாப்ளினை சந்தித்ததன் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் உறை, தண்டியாத்திரை நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் உறை உட்பட பல்வேறு சேகரிப்புகள் இவர் வசம் உள்ளன.
இதுகுறித்து, தேசிய விருது பெற்ற நா.ஹரிஹரன் கூறும்போது, “காந்தியடிகளை கவுரவிக்கும் விதமாக அஞ்சல் துறை சார்பில் 41 முறை அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. காந்தியடிகள் மற்றும் கஸ்தூர்பா காந்தி ஆகியோரின் படங்களுடன் கடந்த 1969-ல் ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. தம்பதியரின் தலைப் படங்களை வைத்து அஞ்சல் தலை வெளியிட்டது அதுவே முதல்முறையாகும். இந்தியா தவிர, உலகில் உள்ள 90 நாடுகள் காந்தியடிகளின் அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன. அவரை நாம் மறக்கக் கூடாது. அதற்காகவே இவற்றை பாதுகாத்து வைத்துள்ளேன். இன்னும் சேகரித்து வருகிறேன். அவற்றை ஏதேனும் ஒரு வழியில் மக்கள் பயன்பெறச் செய்ய திட்டமிட்டுள்ளேன்” என்றார்.