ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் களம் டிஜிட்டல் மயமாகி வாக்காளர்களை ஈர்த்து வருகிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக பல்வேறு உத்திகளை வேட்பாளர்கள் கையாள்கிறார்கள்.
சுவர் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், வீடு வீடாகச் சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது, தெருவோர பிரச்சாரங்கள் என ஒருபுறம் பிரச்சாரம் அமர்க்களமாகி வரும் நிலையில் தங்களது பெயர்கள், சின்னங்கள் குறித்து ஒலிபெருக்கிகள் மூலம் உள்ளூர் மொழிநடையில் திரும்பத் திரும்பச் சொல்லி பலரும் வாக்கு சேகரிக்கிறார்கள்.
இதற்கென ஒலிபெருக்கிகள் கட்டப்பட்ட வாகனங்கள் கிராமம், ஊராட்சி ஒன்றியம், வார்டுகளுக்குள் நாலாபுறமும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சார வசனங்களை எழுதி, பேசி, குரல் பதிவு செய்து அளிக்கும் தொழில்நுட்பம் அறிந்தவர்களுக்கு தற்போது கடும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
வாக்காளர்களின் மனதை கவரும் வகையில் உயர்தரமான தொழில்நுட்ப உதவியுடன் நல்ல குரல்வளம் மிக்கவர் மூலம் வேட்பாளரின் வாக்குறுதிகளை ஒரு நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை குரல் பதிவு செய்து பிரச்சார சிடிக்களை அளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரெக்கார்டிங் மையங்கள் 24 மணி நேரமும் பரபரப்புடன் இயங்கி வருகிறது.
இது குறித்து குரல் பதிவு பிரச்சார வசனங்களை பதிவு செய்து அளிக்கும் குரல் பதிவாளர்கள் கூறும்போது, ‘‘குரல் பதிவு பிரச்சாரம் மிகவும் கடினமான ஒன்று. உள்ளூர் வட்டார வழக்கில் தேர்தல் பிரச்சாரங்கள் இருந்தால்தான் மக்கள் மனதில் எளிமையாக பதியும் என்பதை கவனத்தில் கொண்டு குரல் பதிவு செய்து வருகிறோம். நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு குரல் பதிவு இருக்க வேண்டும் என்பதற்காக உயர்தர தொழில்நுட்பத்தையும், கணினி மென்பொருட்கள் தொழில்நுட்பத்தையும் இணைத்து பயன்படுத்துகிறோம்.
வேட்பாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் அவர்களது பணிகள் குறித்தும், தேர்தலில் வெற்றிபெற்றால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது குறித்தும் கருத்துகளை நயமாகச் சொல்லி குரல் பதிவிடுகிறோம். கூடவே பிரச்சார பாடல்களையும், இடைஇடையே இசை ஜாலங்களையும் நுழைத்து பிரச்சாரத்தை களைகட்ட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’’ என இதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஸ்கிரிப்ட் இயக்குநர்கள் தெரிவிக்கிறார்கள்.
செலவு குறைவு
ஒரு வேட்பாளருக்கு குரல் பதிவு செய்து சிடி அளிக்க மட்டும் ரூ.3 ஆயிரம் வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் அரசு மற்றும் பொது இடங்களில் சுவர்களில் விளம்பரம் செய்வதற்கும் டிஜிட்டல் போர்டுகள் வைப்பதற்கும் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதால் குரல் பதிவு மூலம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனங்களில் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது தங்களுக்கு எளிமையாகவும், செலவு குறைவாகவும் இருப்பதாக வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குரல் பதிவு மட்டுமின்றி வீடியோவாக காட்சிகளை பதிவிட்டு அளிக்க ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட வீடியோ பதிவுகளை வாட்ஸ் அப், முகநூல் மூலம் வாக்காளர்களுக்கு அனுப்பி பல வேட்பாளர்கள் தங்கள் பிரச்சார களத்தை டிஜிட்டல் மயமாக்கி உள்ளனர். இதற்கென்றே வாட்ஸ்அப் குழுக்களையும், முகநூல் குழுக்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.