மாணவர்கள் போராட்டத்துக்குப் பிறகு அக்டோபர் 25ல் மத்தியப்பல்கலைக்கழகம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
கரோனா காரணமாக கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டுள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் திறக்கப்படவில்லை. இதனால் பல்கலைக்கழகத்தைத் திறக்க மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பல்கலைக்கழகப் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் அமரேஷ் சமந்த்தார்யா வெளியிட்ட உத்தரவில், "புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்களை பகுதி, பகுதியாக அனுமதிக்க முடிவு எடுத்துள்ளோம். முதலில் ஆராய்ச்சி மாணவர்களும், அடுத்ததாக பட்டமேற்படிப்பு இறுதியாண்டு படிப்போரும் அனுமதிக்கப்படுவார்கள். வரும் அக்டோபர் 25ல் அறிவியல், பொறியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவர்களும், மனிதநேய மற்றும் சமூக அறிவியல் துறை 4 மற்றும் 5ம் ஆண்டு படிப்போர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதையடுத்து நவம்பர் 15ம் தேதி முதல் இதர பிஎச்டி மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
டிசம்பர் 6ம் தேதி முதல் அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்பத்தில் இறுதியாண்டு பட்டமேற்படிப்பு மாணவர்கள், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பு படிப்போரில் 3ம் ஆண்டு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 17 ஆம் தேதி முதல் சமூக அறிவியல் மற்றும் மனிதநேயத்துறையில் இறுதியாண்டு பட்டமேற்படிப்பு மாணவர்கள், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பில் 3ம் ஆண்டு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதர பட்டமேற்படிப்பு மாணவர்கள் மற்றும் பிஎச்டி முதலாண்டு மாணவர்கள் அனுமதிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் தரப்பில் கூறுகையில், "தமிழகம் புதுச்சேரியில் பள்ளிகளே திறந்து நடந்து வருகிறது. பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு முக்கிய நூலகத்தை பயன்படுத்தவேண்டும். உடன் அனைவருக்கும் திறக்காமல் பகுதி, பகுதியாக நீண்ட இடைவெளி விட்டு திறப்பதால் கடும் பாதிப்பு எங்களுக்கு ஏற்படும். வரும் நவம்பர் 1 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பையே திறக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு பல்கலைக்கழகம் திறப்பதில் ஏன் இந்த இடைவெளி" என்று கேள்வி எழுப்புகின்றனர்.