திருமாவளவன் - வைகோ: கோப்புப்படம் 
தமிழகம்

வைகோ, திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்தியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கடந்த 2016-ம் ஆண்டு எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது சென்னை எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, வைகோ மற்றும் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (அக். 01) விசாரணைக்கு வந்தபோது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் மீது பதியப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT