தமிழகம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையமா?- தினகரன் கண்டனம்

செய்திப்பிரிவு

கூடங்குளத்தில் மேலும் ஓர் அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 3, 4, 5, 6 ஆகிய அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் மற்றும் 2-ம் அணு உலைகளின் அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுமின் நிலையத்திலேயே வைப்பதற்கு ஏற்கெனவே மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. தற்போது, 3 மற்றும் 4-வது அணு உலைகளின் அணுக்கழிவுகளையும், இங்கேயே வைப்பதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு திமுக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அணுக்கழிவு மையத்தில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் தமிழகம், கேரளா மற்றும் தென் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்படும். மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது என்றும் மக்கள் வாழத் தகுதியற்ற பாலைவனம் போன்ற இடங்களில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கூடங்குளத்தில் மேலும் ஓர் அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தில் அணுசக்தித் துறை அளித்த உறுதிமொழிக்கு மாறாகவும் அளிக்கப்பட்டிருக்கும் இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இப்படி ஓர் அணுக்கழிவு மையம் அமைவதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT