தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர், காவல் அதிகாரிகளுடன் ஆணையர் ஆலோசனை: பறக்கும் படையினரால் ரூ.34 லட்சம், பரிசுப் பொருட்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக அக்.6, 9-ம்தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்டஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலிவாயிலாக, மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில், தேர்தல் ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி, ஊரக வளர்ச்சி இயக்குநர் பிரவீன் பி.நாயர், டிஐஜி எஸ்.பிரபாகரன், ஏஐஜி எம்.துரை, கொள்ளை நோய்கள் தடுப்பு இணைஇயக்குநர் ப.சம்பத், ஊராட்சிகள் முதன்மை தேர்தல் அலுவலர் அருண்மணி, நகராட்சிகள் முதன்மை தேர்தல் அலுவலர் கு.தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தலை அமைதியாக நடத்துவது, வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுதல், அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்தல், வாக்குச் சீட்டை வாக்காளர்களுக்கு விநியோகித்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா, வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறைக்கு கண்காணிப்பு கேமரா அமைத்தல் உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் கடந்த செப்.18 முதல் 28-ம் தேதி வரை தேர்தல் பறக்கும் படையினரால், ரூ.7.99 லட்சம் உட்பட மொத்தம் ரூ.33.90 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுதவிர, 16.40 கிலோ சந்தனக் கட்டைகள், 100 மின்விசிறிகள், 215 புடவைகள், 1,065 துண்டுகள், 250 பித்தளை விளக்குகள், 600 குங்குமச் சிமிழ் போன்ற பரிசுப் பொருட்கள், 1,009 மதுபான பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வார்டு வரையறை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதங்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு வரையறை பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், மாநகராட்சி துணை ஆணையர் விசு மகாஜன் உள்ளிட்டோருடன் ஆணையத்தின் தலைவர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

SCROLL FOR NEXT