தமிழகம்

வளர்ச்சி திட்டம் தயாரிக்க 12,525 கிராம ஊராட்சிகளிலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் அக்.2-ல் தொடக்கம்: தேசிய ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

செய்திப்பிரிவு

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்தஆண்டு இறுதி வரை மக்கள் திட்டமிடல் இயக்கம் நடத்தப்படும் என்றுமத்திய அமைச்சர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

வரும் 2022-23 ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையில் காணொலியில் நேற்று நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர்கள், பல்வேறு மாநில அமைச்சர்கள், துறை செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழக அரசு சார்பில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், துறை செயலர் கோபால்,துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர்உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தகூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:

தமிழகத்தில் கிராமப்புற வளர்ச்சி, ஊராட்சிகளின் சமூக, பொருளாதார, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் அயராது பணியாற்றி வருகிறார். 2022-23 நிதி ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக வரும் அக். 2-ம்தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதிவரை தமிழகத்தில் உள்ள 12,525கிராம ஊராட்சிகளிலும் மக்கள்திட்டமிடல் இயக்கம் தொடங்கப்படும். ஊராட்சியில் உள்ள வளஆதாரங்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போதைய காணொலி கூட்டத்தில்பெறப்படும் கருத்துகள், ஆலோசனைகளும் மக்கள் திட்டமிடல் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு, அக்.2-ம்தேதி நடைபெறும் கிராம சபையிலும் விவாதிக்கப்பட்டு, முழுமையான கிராம ஊராட்சி வளர்ச்சிதிட்டம் தயாரிக்கப்படும்.

கிராம ஊராட்சிகளில் உள்ள வள ஆதாரங்கள், தேவைகள், மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், நிதிஆதாரங்கள், பிற துறை ஒருங்கிணைப்பு போன்றவற்றை விவாதித்து ஆய்வு செய்து கண்டறிந்து ஒரு முழுமையான திட்டம் தயாரிக்க இது உதவியாக இருக்கும்.இதுபோல வட்டார ஊராட்சி, மாவட்ட ஊராட்சிக்கும் ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT