தமிழகம்

அண்ணாவுக்கு பிறகு கருணாநிதியை முதல்வராக்கிய எம்ஜிஆரை நம்பிக்கை துரோகி என்று கூறுவதா?- துரைமுருகனுக்கு ஓபிஎஸ், பழனிசாமி கண்டனம்

செய்திப்பிரிவு

அண்ணாவுக்கு பிறகு கருணாநிதியை முதல்வராக்கிய எம்ஜிஆரை நம்பிக்கை துரோகி என கூறுவதா என்று திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு அதிமுகஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

கடந்த செப்.28-ம் தேதி ஜோலார்பேட்டையில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை நம்பிக்கை துரோகிஎன்று கூறியுள்ளார்.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அடுத்த நிலையில் உள்ள அனுபவம் மிக்கவர், தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவார் என்று எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில், கருணாநிதியை முதல்வராக்கியவர் எம்ஜிஆர். அவரைப் பார்த்து நம்பிக்கை துரோகி என்று துரைமுருகன் சொல்வது கடும் கண்டனத்துக்குரியது. திமுக கடந்து வந்தபாதையை, தான் கடந்து வந்தபாதையை மறந்துவிட்டு பேசுகிறாரா அல்லது மறைத்துவிட்டு பேசுகிறாரா என்று தெரியவில்லை.

திமுக என்ற அரசியல் கட்சி ஆட்சியில் அமரவும், கருணாநிதி முதல்வரானதற்கும் காரணமான எம்ஜிஆரையே, கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதி செய்ததுதான் நம்பிக்கை துரோகம்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் இருந்தவழக்கை சத்தம் போடாமல் திரும்ப பெற்றது, தமிழக மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு கருணாநிதி செய்த பெரிய துரோகம். கச்சத்தீவை தாரை வார்த்து, தமிழக மீனவர்களுக்கு செய்தது துரோகம். இலங்கையில் போர் நின்றுவிட்டது என்று கூறி அங்குள்ள தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது, நீட் தேர்வுக்குவித்திட்டது, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு துணையாக இருந்தது, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தது எல்லாம் துரோகமாகும்.

இப்படி எண்ணற்ற துரோகங்களை செய்த கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அந்தப் பணியை துரைமுருகன் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் தன்னைவளர்த்து ஆளாக்கியவரான எம்ஜிஆரையே நம்பிக்கை துரோகி என்று கூறியுள்ளார். எம்ஜிஆர் எந்த காலத்திலும் யாருக்கும் துரோகம் செய்தது இல்லை. அதற்கானஅவசியமும் அவருக்கு இல்லை. ஏனென்றால் அவர் மக்கள் செல்வாக்கு படைத்தவர். எம்ஜிஆரைஇழிவுபடுத்தும் துரைமுருகனின்பேச்சு அதிமுக தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். இவ்வாறுஅவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT