தமிழகம்

மாணவர் தற்கொலை விவகாரம்; மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பொறியியல் கல்லூரி நிர்வாகம் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முதலாண்டு படித்து வந்தவர் அபிநாத் (வயது 18). அவர் கடந்த 11-ம் தேதி கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அந்த பொறியியல் கல்லூரி மற்றும் சுற்றியுள்ள இதர தனியார் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள், தற்கொலை தொடர் பாக கல்லூரி நிர்வாகம் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாணவர்களுடன் பல்கலைக்கழக டீன் (மாணவர் விவ காரங்கள்) ஏ.இளைய பெருமாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே, சாய்ராம் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, நேற்று வெளியிட்ட அறிக்கை:

எங்கள் கல்லூரியில் முதல் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த மாணவர் அபிநாத் கடந்த 11-ம் தேதி அன்று வகுப்புக்கு வராமல் கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மருத் துவ படிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் பொறியியல் படிப்பை ஆர்வத்தோடு படிக்கவில்லை என்பதை அவரது செயல்பாடு மூலம் அறிந்துகொண்டோம்.

ஒருமுறை தனது வீட்டிலேயே கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அவரது தாயாரே தெரிவித்திருக்கிறார்.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேர்வில் 4 பாடங்களில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அவர் மன அழுத்தம் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது நிர்வாகத்துக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

கடந்த 11-ம் தேதி காலை 8.30 மணி யளவில் விடுதியில் காணப்பட்ட அந்த மாணவர் வகுப்புக்குச் செல்லவில்லை. பின்னர் அவரைக் காணவில்லை. அவர் கிணற்றுக்கு அருகில் நின்றுகொண் டிருந்ததைப் பார்த்ததாக விடுதி காவலர் கூறினார். எனவே சந்தேகத்தின்பேரில் போலீஸாரும், தீயணைப்புத் துறை யினரும் கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கிணற்றிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணைக்கு கல்லூரி நிர்வாகம் பூரண ஒத்துழைப்பு தரும். மாணவரை இழந்து வாடும் குடும் பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்று மாணவர்களை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT