விழுப்புரம் மாவட்டத்தில் உள் ளாட்சித் தேர்தலில் நாம் தமிழக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் விழுப்புரம் அடுத்த கோலியனூரில் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் குறிப்பிடும் அளவில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒரே கொள்கையைத் தான் கொண்டுள்ளன. பழனி சாமிக்கு பதில் தற்போது மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். ஆட்சி மாற்றத் தால் எந்த பயனும் கிடையாது.
நாம் தமிழர் கட்சியின் பனைமரங்களை பாதுகாத்தல், தமிழகத்திற்கு தனி வங்கி, தற்சார்பு உற்பத்தி தற்போது மேக் இன் தமிழ்நாடு என்று திமுக செய்து வருகிறது. நாம் தமிழர் கட்சி மக்களைவத் தேர்தலில் 14 லட்சம் வாக்குகளையும், சட்டப்பேரவைத் தேர்தலில் 30 லட்சம் வாங்குகளையும் வாங்கியுள்ளது. கூட்டணி இல்லாமல், கொள்கையுடன் செயல்பட்டு இந்த அளவில் வாக்குகளை வாங்கியுள்ளோம்.
இந்த 9 மாவட்டங்கள் நீங்கலாக நடைபெற்ற கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 12 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளோம். மக்கள் மத்தியில் வளர்ச்சியை எட்டி வருகிறோம். எங்களின் நோக்கம், சீட்டை கைப்பற்றுவது இல்லை. நாட்டை கைப்பற்றுவது.
திமுக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும் தீர்மானங்களை மத்திய அரசு மதிப்பதில்லை. 7 பேர் விடுதலை தொடர்பாக இயற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்கவில்லை. அப்படி மத்திய அரசு மதிக்காதபோது மத்திய அரசு போடும் சட்டங்களை தமிழக அரசு மதிக்காமல் இருக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். புகார் கொடுத்தாலும் வாங்குவதில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்க திமுக ஏன் பயப்படுகிறது என்று தெரியவில்லை என்று கூறினார்.