அயூப், இம்ரான் 
தமிழகம்

வசீம்அக்ரம் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

ந. சரவணன்

மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் 2 பேரைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த மனிதநேய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் துணைச்செயலாளர் வசீம்அக்ரம் (42). இவர் கடந்த மாதம் 10-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சிபுரம் அருகே 2 பேர், வாணியம்பாடியைச் சேர்ந்த 7 பேர் என இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த ‘டீல் இம்தியாஸ்’ உட்பட 8 பேர் நீதிமன்றங்களில் சரணடைந்து தற்போது வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகவும், குறிப்பாக வசீம்அக்ரம் கொலை செய்யப்பட்ட 10-ம் தேதி இரவு கொலையாளிகள் தப்பிச்சென்ற கார் வாணியம்பாடியைச் சேர்ந்தவரின் கார் என்பது, கார் ஓட்டுநராக இருந்தவரும் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி பஷீராபாத் பகுதியைச் சேர்ந்த கார் உரிமையாளர் இம்ரான் (40), ஜீவா நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநரான அயூப் (31) ஆகிய 2 பேரைத் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த லாலா ஏரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இம்ரான் மற்றும் அயூப் ஆகியோர் பதுங்கியுள்ளதாக வந்த தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அந்த வீட்டைச் சுற்றிவளைத்து அங்கிருந்த இம்ரான், அயூப் ஆகியோரைக் கைது செய்தனர்.

மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் ஏற்கனவே 16 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகத் தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT