காரைக்காலில் கூட்டுறவு பால் சொசைட்டி மூலம், வாக்களர் விழிப்புணர்வு வாசகங்களுடனான பால் பாக்கெட்டுகள் விற்பனையை காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா இன்று (செப்.30) தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, ஸ்வீப் அமைப்பு மூலம் வாக்களர் விழிப்புணர்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு நிகழ்வாக, காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் ஸ்வீப் அமைப்பின் சார்பில் நேர்மையாக வாக்களிப்பது, 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் விற்பனையை, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் கூறியது: அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழிப்புணர்வு செயல்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு கிராம மக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் நிகழ்வுகள் நடைபெறும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்த செயல் விளக்கங்களும் நடத்தப்படும் என்றார்.
துணை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரியுமான எஸ்.பாஸ்கரன், பால் உற்பத்தியாளர் ஒன்றிய மேலாண் இயக்குநர் ராவணன், நிர்வாகி எம்.குமாரசாமி, ஸ்வீப் அலுவலர் ஜே.ஷெர்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.