வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிக்கும் ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் தயார் செய்யப்படும் என, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் தலைமையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை துணை அமைச்சர்கள், செயலாளர்கள், பிற மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் இக்காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இக்கூட்டத்தில், அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:
"தமிழகத்தில் கிராமப்புற வளர்ச்சிக்காகவும், ஊராட்சிகளின் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவும் தமிழக முதல்வர் அயராது பணியாற்றி வருகின்றார். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் ஊரகப்பகுதிகள் முழுமையான மற்றும் சமச்சீரான வளர்ச்சி பெறுவதற்கு உரிய உதவிகளை வழங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேலும் சிறப்புடன் செயல்பட முதல்வர் வழிகாட்டி வருகின்றார்.
அவரது ஒப்பற்ற, சீரிய தலைமையின் கீழ் தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை பணிகள் விரைவுபடுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும், 2022-23 ஆம் நிதியாண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம் தயார் செய்வதற்காக, இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் டிசம்பர் 31 வரை தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் தொடங்கப்படும்.
ஊராட்சியிலுள்ள வள ஆதாரங்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படும். இக்காணொலி வாயிலாக பெறப்படும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் மக்கள் திட்டமிடல் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு, அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபையிலும் விவாதிக்கப்பட்டு, முழுமையான கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம் தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மக்கள் திட்டமிடல் இயக்கம் கிராம ஊராட்சிகளில் உள்ள வள ஆதாரங்கள், தேவைகள், எடுக்கப்பட உள்ள பணிகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பிற துறை ஒருங்கிணைப்பு போன்றவற்றை விவாதித்து ஆய்வு செய்து கண்டறிந்து ஒரு முழுமையான திட்டம் தயார் செய்ய உதவிகரமாக இருக்கும்.
கிராம ஊராட்சிக்கு மட்டுமல்லாது வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிக்கும் ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் தயார் செய்யப்படும்".
இவ்வாறு அவர் பேசினார்.