தமிழகம்

அடிப்படை வசதிகள் செய்து தராததால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: கரூரில் மக்கள் தர்ணா

க.ராதாகிருஷ்ணன்

அடிப்படை வசதிகள் செய்து தராததால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி கரூர் அருகே வடக்குபாளையம் குமரன் குடில், குமரன் லே அவுட்டில் மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, தேர்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் தேர்தல் வரும் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறுகிறது. தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரூரை அடுத்துள்ள மேலப்பாளையம் ஊராட்சி வடக்குபாளையம் குமரன் குடில், குமரன் லே அவுட் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி இன்று (செப்.30-ம் தேதி) வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். மேலும், தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 3 இடங்களில் பதாகைகள் வைத்துக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கரூர் அருகேயுள்ள மேலப்பாளையம் ஊராட்சி வடக்குபாளையம் குமரன் குடில், குமரன் லே அவுட்டில் வைக்கப்பட்ட தேர்தல் புறக்கணிப்புப் பதாகை.

இதுகுறித்துத் தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.சிவகாமசுந்தரி, வட்டாட்சியர் மோகன்ராஜ், தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை வசதிகளைச் செய்து தருவதாக உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கருப்புக் கொடிகள், பதாகைகளை அகற்றினர்.

இதையடுத்து உடனடியாக அந்தப் பகுதியில் நான்கைந்து பொது குடிநீர்க் குழாய் அமைப்பதற்கும், மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகள் பொக்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டன. மேலும், புதிய தெருவிளக்குகளும் போடப்பட்டன.

SCROLL FOR NEXT