தமிழகம்

உள்ளாட்சித்தேர்தலில் புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் ஆம்ஆத்மி போட்டி

செ. ஞானபிரகாஷ்

உள்ளாட்சித் தேர்தலில் புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் ஆம்ஆத்மி போட்டியிடுகிறது என்று கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு வந்துள்ள தமிழக, புதுச்சேரி ஆம்ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் சோம்நாத் பாரதி கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியானது ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நேர்மையான, ஊழலற்ற வெளிப்படைத் தன்மையுள்ள அடிதள ஜனநாயகம், அதிகாரம் பரவலாக்கம் செய்ய உள்ளாட்சி அமைப்பு தேவை. இதுவரை இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சித்தேர்தல் புதுச்சேரியில் நடந்துள்ளது. இம்முறை கண்டிப்பாக புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

கடந்த 20 ஆண்டுகளாக புதுச்சேரியில் நிர்வாகத்திறன் இல்லாத ஆட்சிகள் நடந்ததால்தான் புதுச்சேரி கடன் சுமையிலும், அத்தியாவசிய தேவைகளான தரமான சாலைகள், குடிநீர், சுகாதாரம், நியாயவிலைக்கடைகள், மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவை வழங்க முடியாத நிலையிலும் சிக்கியுள்ளது. டெல்லியை போன்று புதுச்சேரியில் தரமான இலவச கல்வி, மருத்துவ வசதி தர முடியும்.

கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இம்முறை களம் இறங்குகிறோம். மக்களிடத்தில் நேரடி தொடர்பு ஏற்படுத்தவே இத்தேர்தலில் போட்டியிடுவோம். புதுச்சேரி மக்கள் பிரச்சினைகளுக்கு கவலைப்படாமல் மாநிலங்களவை எம்பி உள்பட பதவிகளை பெறுவதில்தான் பாஜக குறியாக உள்ளது. வரும் தேர்தலில் பிரச்சாரத்துக்காக அரவிந்த் கேஜ்ரிவால் புதுச்சேரி வருவார்" என்று குறிப்பிட்டார்.

பேட்டியின் போது புதுச்சேரி மாநில பொறுப்பாளர் ரவி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். இத்தேர்தலில் ஆம்ஆத்மியுடன் புதுச்சேரி மாநில உள்ளாட்சிக் கூட்டமைப்பு, இணைவோம் மீனவனாக மக்கள் ஒருங்கிணைப்பு இயக்கத்தினர் இணைந்து போட்டியிட உள்ளனர்.

SCROLL FOR NEXT