தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் இன்று (30-ம் தேதி) திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அரசுத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் தருமபுரி வந்தார்.
முதல் நிகழ்ச்சியாக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் (CEmONC) உள்ளிட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர், நான்கு தளங்களாக 5060 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வளாகத்தை அவர் பார்வையிட்டார். இந்த பிரிவு ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிட வளாகத்தில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற 95 படுக்கைகள் உட்பட மொத்தம் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 ஊராட்சிகளுக்கும் மற்றும் சிறப்பாக கரோனா பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு விருது மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
அதன் பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சுகாதாரத் துறையின் பரிசு பெட்டகங்களையும் முதல்வர் வழங்கினார்.
இந் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, பென்னாகரம் வட்டம் ஒகேனக்கலில் அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் ஒகேனக்கல் புறப்பட்டுச் சென்றார்.