தமிழகத்தில் ஏசி பேருந்துகளின் சேவை நாளை தொடங்கப்படுவதையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய பணிமனையில் அரசு போக்குவரத்துக் கழக ஏசி பேருந்துகளில் பராமரிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

அரசு ஏசி பேருந்துகளின் சேவை நாளை தொடக்கம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நாளை முதல் 702 ஏசி அரசு பேருந்துகளின் சேவை தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல்குறைந்து வருவதையடுத்து, ஏசிபேருந்துகளின் சேவை விரைவில்தொடங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.

பராமரிப்பு பணிகள் தீவிரம்

அதன்படி, அரசு போக்குவரத்து கழகங்களில் இருக்கும் 700-க்கும் மேற்பட்ட ஏசி பேருந்துகளில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கிருமிநாசினிகள் தெளித்து,தூய்மை பணிகளும் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் ஏசி பேருந்து சேவை நாளை தொடங்குகிறது.

இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: ‘‘தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து, நாளை (அக்.1) முதல் அரசு ஏசி பேருந்துகளை இயக்க தயாராக வைத்துள்ளோம். அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 702 பேருந்துகள் இருக்கின்றன. தேவைக்கு ஏற்றார்போல், ஏசி பேருந்துகள் இயக்கப்படும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும். அனைத்துப்பயணிகளும் சானிடைசர் மூலம்கைகளைச் சுத்தம் செய்த பிறகுதான் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், ஏசி பேருந்துகளில் தினமும் கிருமிநாசினி தெளித்து இயக்க சம்பந்தப்பட்ட அனைத்துஅதிகாரிகளுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்

SCROLL FOR NEXT