எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள பலர், ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவதால் தங்குவதற்குக் கூட இடமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ‘இந்நோய் பாதிப்புள்ள ஆதரவற்றவர்கள் தங்குவதற்கு மாவட்டம் தோறும் அரசு காப்பகங்கள் அமைக்க வேண்டும்; அதை கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து நிறைவேற்ற வேண்டும்’ என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
தமிழகத்தில் எச்.ஐ.வி. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2012- 13 ஆண்டில் 0.36 சதவீதமாக இருந்த இந்நோயின் தொற்று தற்போது 0.25 சதவீதமாக குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நோய் தொற்று உள்ளவர்களுக்கு அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள மருத்துவ வசதிகளும், மேலும் பல சலுகைகளுமே இந்த நோய் பாதிப்பைக் குறைத்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனாலும் சமூகப் புறக்கணிப்பு என்பது இந்நோயாளிகளுக்கு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே அதை சரி செய்யக்கூடிய வகையில், அத்தியாவசியத் தேவைகளை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து, செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கோவை மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் நலச்சங்கத் தலைவர் ஆர்.மீனாட்சி கூறியதாவது:
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை மையங்கள், ஏஆர்டி கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள், இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், இலவச சட்ட உதவி மையங்கள், பால்வினை நோய் தடுப்பு சேவை மையங்கள் மற்றும் பல நலத் திட்டங்கள் கிடைக்கின்றன.
ஆனால், சமூகப் புறக்கணிப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண காப்பகங்கள் தேவையாக உள்ளன. சிறார்களுக்காக பல தன்னார்வ அமைப்புகள் காப்பகங்களை நடத்துகின்றன. ஆனால் பெரியவர்களுக்கு அந்த வசதிகள் கிடைப்பதில்லை.
கோவையில் கூட எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் திறந்தவெளியில் தங்கியிருந்து, பிச்சையெடுக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்டம்தோறும் ஒரு காப்பகத்தை அமைப்பதே இப் பிரச்சினைக்கான தீர்வு. சுயதேவைகளைக்கூட செய்துகொள்ள முடியாத நிலையில், நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மண்டல அளவில் ‘டெர்மினல் கேர் சென்டர்களை’ அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இடஒதுக்கீடு..
ஏஆர்டி மையங்களில் மாதம் ஒரு முறை சிகிச்சையும், மருந்தும் வழங்கப்படுகிறது. எச்ஐவி உள்ளவர்கள் பலர், வெளியிடங்களில் வேலைக்குச் சென்று வருவதால், அவர்களது உடல்நிலை, குடும்பச் சூழல் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாதத்துக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது இந்த மையம் செயல்பட வேண்டும். இதனால் பணிக்குச் செல்வோர், கல்வி பயில்வோர் பயனடைவார்கள். அதேபோல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெறுபவர்களது குழந்தைகளுக்கு உயர் கல்வியில் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை சட்டப்பேரவைத் தேர்தலில், அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாகக் கொடுத்து, நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.